போபால், மே 12-நாடாளுமன்ற தேர்தலின் 6வது கட்டம் மே 12 ஞாயிறன்று நடைபெற்றது. பல முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகள் தேர் தலை சந்தித்தன. எனினும் கவலை தரும் ஒருமுக்கிய தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. அது மத்தியப்பிரதேசத்தின் போபால் தொகுதி ஆகும். இங்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் போட்டியிடுகிறார். எவரும் எதிர்பாராதவிதமாக, பயங்கரவாத குற்றச் சாட்டுக்கு ஆளான பிரக்யா சிங் தாகூர் எனும் ஒரு பெண் சாமியாரை பா.ஜ.க வேட்பாளராக களமிறக்கியது. இந்துத்துவா விஷத்தை ஆழமாக கக்கும் பிரக்யா பா.ஜ.க.வின் வேட்பாளர்என்பது பலராலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. ஆனால் மோடி-அமித்ஷா கும்பல் கவலைப்படவில்லை. அவர்களின் நோக்கம் முற்றிலும் வேறானது!
ஹேமந்த் கார்க்கரேயும், பிரக்யாவும்
மாலேகான், சம்ஜவுதா விரைவு ரயில் வண்டி, ஆஜ்மீர், மெக்கா மசூதி ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்றுதான் பொதுவாக பலர் கருதினர். எனினும் இந்த வழக்கை புலனாய்வு செய்த ஹேமந்த் கார்க்கரேவுக்கு ஒரு நெருடல் இருந்தது. இஸ்லாமிய பயங்கரவாதிகள் முஸ்லிம்களை குறிவைத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்துவது அரேபியா மற்றும் பாகிஸ்தானில் நடப்பது உண்டு. ஆனால்இந்தியாவில் அதற்கு என்ன தேவை? இந்த கேள்வி அவரது மூளையில் உலா வந்த வண்ணம் இருந்தது. இந்த வழக்குகளில் குறிப்பிடத்தக்க எந்தமுன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்பொழுதுதான் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர புல்லட் வாகனம் கைப்பற்றப்பட்டது. அதன் பதிவு எண் பொய்யானதாக இருந்தது. ஆனால் கார்க்கரே அதன் சேச்சஸ் எண்ணை கண்டுபிடித்தார். அந்த எண்ணை இரு சக்கர வாகனம் தயாரித்த நிறுவனத்திடம் கொடுத்து அந்த வாகனம் யாருக்கு விற்கப்பட்டது எனும் தகவலைப் பெற்றார். அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த வாகனம் பிரக்யா தாகூருக்கு சொந்தமானது. இதுதான் இந்த புலன் விசாரணையில் முக்கிய திருப்புமுனை. இதன் பின்னர் கார்க்கரேவின் புலனாய்வு திறமை பிரக்யா உள்ளிட்ட பலர் உருவாக்கிய சதியின் பல அம்சங்களை வெளிக்கொண்டு வந்தது. அபினவ் பாரத் எனும் அமைப்பு மூலம்பிரக்யா தாகூர், இராணுவ அதிகாரிகள் புரோஹித், உபாத்யாய் மற்றும் சுவாமி அஸீமானந்த் உட்பட பலர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பதிலடி என்ற பெயரில் இந்துத்துவ வெறி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத சதி என்ற பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டனர். இந்த சதியின் மையப்புள்ளி பிரக்யா தாகூர்தான் என்பதை கார்க்கரே வலுவாக நிலை நாட்டினார்.எனவேதான் கார்க்கரே மீது பிரக்யா வெறித்தனமான ஆத்திரம் கொண்டார்.அபினவ் பாரத் எனும் அமைப்பு நேரடியாகஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பு அல்ல. ஆனால் முஸ்லிம் மற்றும் கிறித்துவ வெறுப்பைஅடிப்படையாக கொண்ட இந்துத்துவா கோட்பாடுகளில் இரு அமைப்புகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. எனினும் ஒரு முக்கியமுரண்பாடு இருந்தது. ஆர்.எஸ்.எஸ். தனது அடிப்படை கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்து விட்டது என பிரக்யா உட்பட அபினவ்பாரத் அமைப்பினர் கருதினர். எனவே இந்துத்துவாவை தாங்கி பிடிக்கும் அமைப்பு என்பதில்ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அகற்றிவிட்டு அந்தஇடத்தில் அபினவ் பாரத் இருக்க வேண்டும் என எண்ணினர். உண்மையில் பிரக்யா தாகூர்உட்பட அபினவ் பாரத் அமைப்பினர் தங்களதுதலைவர்களை கொல்ல முயன்றனர் என்று கூடஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒரு கட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினர் என்பதும் நினைவுகூரத்தக்கது.
பிரக்யா தாகூரை முதலில் கைது செய்தது யார்?
இத்தகைய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபரைதான் மோடி- அமித்ஷாகூட்டணி, போபால் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்கு முன்புதான் பிரக்யா தாகூர் பா.ஜ.க.உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்யா தாகூரை வேட்பாளராக களம் இறக்கியதை எதிர்கட்சிகள் விமர்சித்த பொழுது 5000ஆண்டு இந்து நாகரிகத்தையே இழிவு படுத்துகின்றனர் என மோடி எரிந்து விழுந்தார். பிரக்யாதாகூர் இந்து நாகரிகத்தின் பிரதிநிதி என கூறுவதே இந்து மதத்தை அவமானப்படுத்துவது என பலர் விமர்சித்துள்ளனர். இந்து மதம் என்பதுவேறு! ஆர்.எஸ்.எஸ்-பிரக்யா-மோடி- அமித்ஷாகூட்டணி முன்வைக்கும் இந்துத்துவா என்பது வேறு! எனினும் பிரக்யா தாகூரை பயங்கரவாதி என முதலில் குற்றம்சாட்டியது யார் தெரியுமா? சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச பாஜக அரசாங்கம்தான்! ஆம்!2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷிஎனும் ஆர்எஸ்எஸ் தலைவரை கொன்றதாக பிரக்யா தாகூரையும் வேறு சிலரையும் ம.பி.காவல் துறையினர் கைது செய்தனர். இந்துத் துவ பயங்கரவாத குண்டு வெடிப்புகளில் சுனில்ஜோஷிக்கும் முக்கியப் பங்கு இருந்தது. எனினும் பின்னர் முரண்பாடுகள் உருவாகின. சுனில்ஜோஷி தங்களை காட்டிக் கொடுக்கும் அபாயம்உள்ளது என கருதிய பிரக்யா தாகூர் உள்படசிலர் ஜோஷியை கொன்றதாக குற்றம்சாட்டப் பட்டது. ஜோஷி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரக்யா தாகூர் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று பிரக்யாதாகூரை கொலையாளி என கைது செய்த பா.ஜ.க. முதல்வர் சவுகான், இன்று அதே பிரக்யா இந்திய சமூகத்தை கட்டிக்காப்பவர் என வாய் கூசாமல் வாக்கு கேட்டிருக்கிறார்.பிரக்யா தாகூர் மீது எந்த வழக்கும் இல்லைஎன பாஜக தலைவர் அமித் ஷா கூறுகிறார். பொய் பேசுவது பா.ஜ.க. தலைவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல! குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்து பிரக்யா தாகூர் உட்பட பலரை விடுவிக்க மோடி அரசாங்கம் முயன்றது.குற்றப் பத்திரிக்கைகளை நீர்த்து போகச் செய்து,நீதிமன்றங்களில் பிரக்யா மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தேசிய புலனாய்வு கழகம் கூறியது. ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. எனவே தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் பிறர் உதவி இல்லாமல் தன்னால் நடக்கக் கூட இயலவில்லை எனவும் பிரக்யா மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே பிரக்யாவை பிணையில் விடுதலை செய்தார். பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் நீக்கவில்லை.மார்பக புற்று நோய் இருக்கும் பொழுது எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் எனும் கேள்வி எழுந்தது. அதற்கு பிரக்யா தாகூர் ஒரு அற்புதமான பதிலை அளித்தார். அத்தகைய பதிலை சங்பரிவாரத்தினர் மட்டுமே தர முடியும்! தான் கோமியம் (பசு மாடின் சிறுநீர்)தொடர்ந்து சாப்பிட்டதாகவும் அதன் விளைவாக புற்று நோய் பறந்தோடிவிட்டது எனவும் கூறினார். பிரக்யா தாகூருக்கு புற்று நோய் இருந்ததா என்பதும் கோமியம் அதனை குணப்படுத்தியதா என்பதும் ஆராய்ச்சி செய்தால் பதில் என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்!
பிரக்யாவை திக்விஜய் சிங் எப்படி எதிர்கொண்டார்?
பிரக்யா தாகூர் பிரச்சாரம் எப்படி அமைந் தது? தான் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி கண்ணீர்விட்டார். இந்துமத துறவியான தனது கண்ணீருக்கு திக்விஜய்சிங்தான் காரணம் எனவும் தனது கண்ணீருக்கு பழிவாங்க இந்துக்கள் அனைவரும் திக்விஜய்சிங்கை தோற்கடிக்க தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார். தான் வெற்றி பெற்றால் தொகுதிக்கும் மக்களுக்கும் என்ன செய்வேன் என்பது குறித்து ஒருவார்த்தை கூட கூறவில்லை. பிரக்யா தாகூரின் பிரச்சாரத்தை முறியடிக்கஅவரது வழியிலேயே செல்ல வேண்டிய நிலைக்கு திக்விஜய்சிங் தள்ளப்பட்டார். பிரக்யாவுக்கு எதிரான பல துறவிகளை திரட்டினார். யாகங்கள் நடத்தினார். ஆனால், பிரக்யா தாகூரின் இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து மறந்தும் திக்விஜய்சிங் பேசவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக போபால் தொகுதியில் காங்கிரஸ் வென்றதே இல்லை. திக் விஜய் சிங் இதனை மாற்றுவாரா என்பது 23ம் தேதி தெரிந்துவிடும்! இவ்வளவு முரண்பாடுகள் இருந்தும் பிரக்யா தாகூரை ஏன் மோடி- அமித்ஷா கூட்டணிகளத்தில் இறக்கியுள்ளது? பொருளாதார சாதனைகளை முன்வைக்க மோடியிடம் எதுவுமே இல்லை. எனவே மதவாதம் எனும் தனது இறுதிஆயுதத்தை சுழற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு தீவிர இந்துத்துவ பயங்கரவாதியை களமிறக்குவதன் மூலம் தான்ஒரு இந்துத்துவவாதி என்பதில் இம்மியளவும் மாறவில்லை என்பதை நிலைநாட்ட மோடி முயல்கிறார் என சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் அபினவ் பாரத்- ஆர்.எஸ்.எஸ்.- மோடி இடையே உள்ள சிலமறைமுகமான முரண்பாடுகளுக்கும் ஒரு பங்குஉண்டு என்பதும் மறுக்க முடியாது. எனினும் இந்துத்துவாவை முன்நிறுத்துவதில் இந்த முரண்பாடுகள் பின்னுக்கு போய்விடுகின்றன என்பதே போபால் தேர்தல் களம் வெளிப் படுத்தும் உண்மை.
அ.அன்வர் உசேன்
ஆதாரங்கள்: The wire/ Counter current